Sunday, 24 January 2021

அழகிய டைப்போகிராபி

குழந்தையாய் 

கொஞ்சித் திரியும்

அவள்தான்

சமயங்களில்

குரங்காகவும்

மாறுவாள்..


இஃது 

அவள் தவறல்ல..

இயல்பே!!


தவறென்றால்

மன்னியுங்கள் என

மன்றாடலாம்..


இயல்பென்பதால்

வேறு வழியில்லை

ஏற்றுக் கொள்ளுங்கள்..


ஏனெனில்...


கடவுள்

உங்கள் தலையில்

அழகாக கிறுக்கிய

டைப்போகிராபி

அவள் 💕👻


#அவள்_அப்படித்தான் 



Friday, 27 November 2020

இவளின் காதல் 💕

 இப்படித்தான் 

எனது காதலை

சொல்லத் தெரிகிறது..


கடந்து செல்லும் பொழுது

செல்ல இடிஇடித்தும்


தூங்கும் பொழுது

மீசையை பிடித்திழுத்தும்


சாப்பிடும் பொழுது

விரல்கடித்து கவளம் வாங்கியும்


வீட்டுக்குள் வரும் நேரம்

கதவுபின் ஒளிந்து

கண்ணாமூச்சி காட்டியும்


என் காதலை வெளிப்படுத்துகிறேன்..


சிறுபிள்ளைத்தனமாய்

இருந்தாலும்

என் பெரும் காதல் இது 💕💕




Tuesday, 3 November 2020

மெல்லிதயம் அறிவாயா ?

தீராக் காதலில் 

திளைத்துக்

கொண்டிருக்கிறாய்..


இருந்து கொள்..


ஆனால்.......


பலமாய்

பற்றிக் கொண்டிருக்கும்

உன் பேரன்பின்

இறுக்கமான

பிடிதனில்


தன் வர்ணம் இழந்து


பலம் இழந்து


விரக்தியடைந்து


மெல்லச் சாகும்

பட்டாம்பூச்சியை


ஏதேனும் 

எறும்புகள் 

இழுத்துச் செல்லும்

பொழுதாவது 

அறிந்து கொள்வாயா ?? 


மென்மையான 

பட்டாம்பூச்சிக்கும்

மெல்லிதயம்

உண்டென்று.. !??




Monday, 26 October 2020

மனமே... எனைத் தேடாதே !!

நான் எங்கே என

எனைத் தேடும் மனமே

இனி

எனைத் தேடாதே..


உருகி கரைந்து 

மறைந்து தொலைந்து

கொண்டிருக்கிறேன்

அவன் பிரியம்

என்னும் தணலில்...

எனைத் தேடாதே மனமே..


ஆம்..


கொஞ்சம் கொஞ்சமாக

ஆட்கொண்டு

எனை உருக்கித் தீர்க்கிறது

மொத்தமாய்

அவன் பிரியமெனும்

தணல்..


ஆனாலும்..


இத்தணலின் ஸ்பரிசம்

விநோதமானதே!!


பூவிதழில் தங்கும்

மழைத்துளியானது

சற்றே

சிதறித் தெளித்து

சிலிர்த்திட செய்யும்

குளுமையோடு

ஆக்கிரமிக்கும்

பிரியத்தின் தணல் 

இது ..


இன்னும் இன்னும் 

என

இன்னும் கொஞ்சம்

உருகிக் கொள்கிறேன்..


ஆகையால்...

என் மனமே

நீ ஓய்வெடு..

எனைத் தேடாதே  💕💕



Thursday, 17 September 2020

சபிக்கப்பட்ட சாபம்

கண்ணீரோடு விடும்

சாபம் பலிக்குமாம்..


யார் சொன்னது ?


கைம்பெண்ணாய் மாறிய

பெண்களின் கண்ணீரிலும்


அநாதையாய் திரியும்

பிள்ளைகளின் கண்ணீரிலும்


செழித்தோங்கி 


கோடிகளில் புரள்கிறது

டாஸ்மாக் வியாபரம் 




காதலித்துப் பார் 💕

 காதலித்துப் பார்..

 

கனவுகள் அதிகமாகும்..


புன்னகை முகமாகும்..


சந்தோசம் இரட்டிப்பாகும்..


நடப்பதே மிதப்பதாகும்..


உரிமைகள் கூடும்..


எதிர்பார்ப்புகள் எகிரும்..


கோபங்கள் பிறக்கும்..


சண்டைகள் நிகழும்..


இம்சைகள் இம்சிக்கும்..


சிங்கிளாய் இருக்க மனம் ஏங்கும்..


காதலித்துப்பார் 💕💕




Tuesday, 7 July 2020

என் சிநேகிதனே !

சிலந்தி
வலையத்தனை போல
மெல்லிய நூலளவு
இடைவெளி கோடு
நமக்கிடையே..

அது
அப்படியே இருக்கட்டும்..

இப்பொழுதோ
எவ்வித தயக்கமின்றி
உன்னுடன்
எல்லாவற்றையும் பகிர்கிறேன்..

அது இல்லையெனில்
நமக்கிடையே
உருவமில்லா சுவர்
எழுப்பப்படும்..

ஏகமான எதிர்பார்ப்புகளால்
காரணமின்றி காயங்கள்
நிகழக்கூடும்..

அம்மாயவலை
எந்த நொடியும்
அறுந்து விட
கூடாதென்பதுவே
என் பிரார்த்தனை..

சாத்தியமாகாது
என தெரிந்தும்
சண்டித்தனம்
செய்யும் மனதிற்கு
கடிவாளமிட்டுக் கொள்..

அதுதான் எப்பொழுதும்
ஆகச்சிறந்தது..

உன்னையும்
இழக்க விரும்பவில்லை
என் சிநேகிதனே!! 💕




Monday, 8 June 2020

அவளும் ஆழி தான் 💕

அவளும் ஆழி தான்... 💕💕

அமைதியாய் திரியும்
அவளின் ஆழ்மன தத்தளிப்பை
அவளின்றி யாரும்
அவ்வளவு எளிதில் அறிவதில்லை..

எத்தனை எத்தனை
கஷ்டங்களையும்
தனக்குள்
உள்ளிழுத்துக் கொள்வாள்
கொஞ்சம்கூட வெளிக்காட்டாமல்...

எத்தனை சூறாவளி புயல் போராட்டங்கள் வந்து
கொந்தளிக்க வைத்தாலும்
அவ்வளவு எளிதில்
அவள் தனக்கான எல்லையை
தாண்ட மாட்டாள்..

அப்படி தாண்டினால் என்றால்
நிச்சயம் பேரழிவு தான்
அவளைச் நிச்சலனப்படுத்திய  அத்தனைபேருக்கும்

ஆனால்...

அவளை அறிந்தவர்களுக்கு
அவள் ஒரு ஆழக்கிடக்கும்  பொக்கிஷம்

அவள் ஒரு மறைந்திருக்கும் புதையல்

அவள் ஒரு தனித்துவ எழில் ஓவியம்

அவள் ஒரு ரசனைமிக்க அழகுக்காரி

அவள் ஒரு அழியாத பாசக்காரி

ஏனெனில்
அவளும் ஆழி தான் 💕💕



Wednesday, 13 May 2020

பிரிவு

ஒற்றை நரம்பை மட்டும்

பற்றி இழுத்து

உருவி எடுப்பதுபோல்

தோன்றும்

பிரிய உறவின்

பிரிவின் வலியை

வெளிப்படுத்த கூடாதென

விழிகளை

மேலும் கீழும் உருட்டி

கண்ணீர்த்துளிகளை

உள்ளிழுத்து

துடிக்கும் உதட்டை

இழுத்து பிடித்து

வலிகள் மறைத்து

புன்னகை புரிந்து

நிற்பதுவும்

வாழ்க்கை கற்றுத்தந்த

சவாலான பக்குவமே...



சில மணிகளோ

சில நாட்களோ

சில வருடங்களோ

இல்லை

ஆயுளுக்கும் நிரந்தரமோ..

பிரிவு என்பது

எப்பொழுதும்

வலிகள் மட்டுமே தரும்

வரம் தான்..



ஏற்றுக் கொள்ளத்தான்

வேண்டுமென

எத்தனைவிதமாகவோ

தனக்குதானே

உணர்த்தினாலும்...

எதிலெதிலோ

மனதை செலுத்தி

வாழ்க்கை பயணத்தை

தொடர்ந்தாலும்



மழை துளியின்

குளிர் ஸ்பரிசமாய்

கோடையின்

சுடும் வெயிலாய்

ஒரு தாக்கம்

ஊசலாடவே செய்கிறது

பிரிவை சுமக்கும்

பாழும் மனதில் ..



ஆறடி குழிக்குள்

அடக்கம் பண்ணிய

பின்பாவது அடங்குமா

இந்த பிரிவின் வலி!!















Monday, 23 March 2020

காதல் தீ

பாதங்களை பற்றிக்கொள்

விரல்களை நெறி

கழுத்தில் புதைந்துவிடு

மார்பில் தடம் பதி

கன்னக்கதுப்பை செம்மையாக்கு

காதுமடல்களை கூசச்செய்

இமைகள் மூடியிருக்க
இனம்புரியா உணர்வினை
விழிக்கச் செய்

நீ மூட்டிய தீயை
நீயே அடக்கிவிடு
என்னில் அடங்கி

நீ மீட்டிய அதிர்வை
நீயே ஸ்வரமாக்கு
சிணுங்கல்களால்

கதறும் என் அணுக்களை
சமாதானப்படுத்து

நடுங்கும்  என் தேகத்தை
ஆளுகை செய்

தனி உலகம் நமக்கு வேண்டாம்

நம் தனிமையே நம் உலகம் தான்💕




Wednesday, 11 March 2020

அவனின் அவள் 💕

தோழி காதலியென
அவளை
பிரித்து பார்க்க
முடியாது

தோழியென ஆறுதல் சொல்வாள்
சட்டென்று காதலியாய் மாறி சண்டையிடுவாள்

அவள் அப்படி தான்
அவளிடம்
பிடித்ததும் அது தான்

அவள் வந்ததும்
அழகானது கவிதை,
கவிதையானது வாழ்க்கை
இனிதானது விடியல்
இனிப்பானது இரவு
நீ நீ என்று
நிறைந்தது என் நினைவு 💕💕


Friday, 21 February 2020

தவிப்பு

வழக்கமான நேரம் 
தாண்டியதும் 

கடிகாரத்திற்கும் வாசலிற்கும் ஊசலாடும் கண்கள்

வண்டி சப்தம் 
கேட்கிறாத 
என கூர்மையாகும் காதுகள் 

எடுக்கப்படாத அலைபேசி அழைப்பால், 
பதில்வராத குறுஞ்செய்தியால்
பரிதவிக்கும் மனது

எல்லா கலக்கங்களும் 
நீ வந்தவுடன் 
சட்டென்று 
இறுகத்தழுவி
கண்ணீராகியது 💕💕


Thursday, 20 February 2020

நிறைவு

"பிளிஸ் பிளிஸ்..இரண்டே நிமிடம் மட்டும்"  என்றபடி

பேசும் நிமிடத்தில் மொத்த காதலும்

தூங்கும் நிமிடத்தில் மொத்த சுகமும்

கிளம்பும் நிமிடத்தில் மொத்த அழகும்

செய்யும் சமையலில் மொத்த சுவையும்

நிறைந்திருப்பதுபோல ஒரு உணர்வு ஆட்கொண்டுவிடுகிறது 😌😌