Friday, 26 August 2022

பயணங்கள் சலித்ததில்லை !

பயணங்கள் ஒருபோதும்

சலிப்பதே இல்லை ! 


குழந்தையாய் குதூகலிக்கவும் வைக்கும்


பொறுப்பாய் இருக்கவும் செய்யும்


முகங்களை படிக்கவும் வைக்கும்


நினைவுகளை சேகரிக்கவும் செய்யும்


தூரத்தில் மெதுவாய் கடக்கும் மலைத்தொடரையும்

அருகே சட்டென்று கடக்கும் காற்றாலையையும்

பிரமிப்பாய் பார்க்கும்


அந்திசாயும் சூரியனையும்

உலாவரும் பிறைநிலவையும் 

விடாமல் வேடிக்கை பார்க்கும்


மழலையின் குறும்பை ரசித்து

முதுமையின் தனிமையை இயலாமையோடு பார்க்கும்


வெயிலைச் சலிக்கும்

சாரலை சிலாகிக்கும்

கூட்டத்தை வெறுக்கும்

நட்பை பாராட்டும்


சில முகச்சுளிப்புகள்

சில கண்ஜாடைகள்

சில புன்னகைகள்

சில உரையாடல்கள்

சில வாக்குவாதங்கள்

என பல்கலைக்கழக பாடங்களாய்

கற்றுத்தருகிறது வாழ்வை..


பயணங்கள் ஒரு போதும்

சலித்ததேயில்லை !






Sunday, 17 April 2022

உறவுகளின் ருசி

கத்தரிக்காவை

அரிந்து கொண்டே

நாலு வீட்டு கதைசொல்லும்

நாத்தனார்


யத்தே ...

அந்த சறுவ சட்டியை 

கொண்டாங்க மினுக்கனும்

என்றபடியே 

ம்ம் கொட்டும் ஓரகத்தி


அவ்வப்பொழுது

பசிக்குது என 

தட்டை தூக்கி வரும் 

கடைக்குட்டியின் வாரிசு


சிக்கெடுத்து

நான் தலை வாரிவிடவா

என பட்டைச் சீப்போடு

பக்கத்தில் வரும் அக்கா மகள்


ரம்மி விளையாடுகையில்

ரகசியமாய் ஜோக்கரைத்

தரும் சித்தப்பா


வீட்டிற்கும் கடைக்குமாய்

பேத்தியின் விரல்பற்றி

சலிக்காமல்

அலையும் பெரியவர்


பலவித உறவுகளின்

பலவித உரிமைகளும்

பலவித உணர்வுகளுமாய்..


தனியாய் ஆக்கித் தின்னும்

குண்டான் சோற்றில்

ஒருபொழுதும் கிடைப்பதில்லை 


இப்பண்டிகை நாட்களின்

குதூகல ருசி!




Wednesday, 15 December 2021

அவள் !?

 அலட்சிய புன்னகை

எடுத்தெரியும் பேச்சு

கோபப்பார்வையோடு

இருப்பவளை

திமிரானவள் என

உடனே அறிக்கையிட்டு

கூவாதீர்கள்


யாருக்குத் தெரியும்..


இப்பிரபஞ்சத்தின்

கொடூரப் பிடியினின்று

தப்பிப்பிழைக்க

சாத்தான் வேடமிட்ட

தேவதையாகவும் இருக்கலாம் !

பிரிவு என்ன செய்யும்?

 ஒரு பிரிவினால் என்ன செய்துவிட முடியும்?


ரணமாய் வேதனை தரும்


உயிர்கரைய அழுது தொலையும்


விரக்தியாய் பேச வைக்கும்


நினைவுகளை சுமந்து அலையும்


காலங்கள் உருண்டோட எதோ ஒரு தருணத்தில் யோசித்து பார்த்து மெல்ல நகைக்கும்


அவ்வளவுதானே !!

வாழ்ந்திருக்கிறீர்களா?

 ஒரு காதலை உணராமல் இருக்கிறீர்களா?


ஒரு பிரிவை அழாமல் கடக்கிறீர்களா?


ஒரு நட்பை விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கீர்களா?


ஒரு துரோகத்தை சந்திக்காமல் இருக்கிறீர்களா?


இல்லையெனில்..


நீங்கள் இன்னும் வாழவே ஆரம்பிக்கவில்லை.

Wednesday, 17 November 2021

நான் கோபமாய் இருக்கிறேன்! 💕

 நான் கோபமாய் இருக்கிறேன்!


உம்மென்று

நான் வலம்வரும்

இடமெல்லாம்

உன் கண்கள்

மேய்வதை கண்டு

இதழோரம் புன்னகைப்பதை பார்த்தாயா


கோபத்தின் அடர்த்தியை

உணர்த்தும் 

ணங்கென வைக்கும் பாத்திரங்களின் சத்தமும் 

குறைந்துவிட்டதை அறிவாயா


ஏனடா தாமதம் என

முதுகுகாட்டி இருப்பவளின் உதடுகள்

முணுமுணுப்பை

அறிந்தாயா


இல்லையெனில்


விரைவில் முற்றுப்புள்ளி 

வையடா இச்சிறு நாடகத்திற்கு..


ஏனெனில்


நான் கோபமாய் இருக்கின்றேன் 💕




Tuesday, 21 September 2021

சிதறிக் கிடக்கும் நேர்த்தி

 நேர்த்தியாய் இருப்பது

தான் அழகென்று

பறை சாற்றாதீர்கள்..


ஓர உச்சியெடுத்து 

அம்மா ரசித்து

படிய வாரிய

கேசமானது

பரட்டையாக கலைத்துவிட்டு


தேடித்தேடி எடுத்த 

இளஞ்சிவப்பு ஆடையை

கைகுட்டையென 

மூக்கை வாயை 

துடைத்தபடி


கற்றுக் கொண்ட 

கோடு வட்டத்திற்கிடையே

அ-வும் A-யும்

சந்தோசமாய் வசிக்க


ஊதா நிற யானையும்

ஆரஞ்சு வர்ண காகமும்

சுவரோவியமாய்

கூடி விளையாட


காது கிழிந்த டெடியும்

கண்பிதுங்கிய மினியனும் 

சக்கரமில்லாத வண்டியில்

சந்தோசமாக பயணப்பட


இப்படியாக..


நேர்த்திகள் ஒவ்வொன்றும்

ஆங்காங்கே

சிதறி எழிலாய்

மிளிர்கிறது

பிள்ளைகளும் வீடும் 


எங்கே..

இப்பொழுது சொல்லுங்கள்


நேர்த்தி தான் அழகென்று💕



Wednesday, 8 September 2021

ப்ரியம் விற்பனைக்கல்ல

ஆசையாய் பார்த்த கண்கள் அந்நியப்பட்டுக் கிடக்கின்றது


பின்னிக்கோர்த்துக் கொண்ட விரல்கள் பிரிந்து தூரமாய் நிற்கிறது


காதலை மொழிந்த இதழ்கள் கடுஞ்சொல்லின் கூடாரமானது


இப்டித்தான் இருப்பாயா..

இருந்து கொள்


என் பேரன்பும் பெருங்காதலும்

தராத நிம்மதி

என் பிறந்தவீட்டின்

தங்கம் தருமெனில்


நீயே சத்தமிட்டு கூறிக் கொள்


இவளின் ப்ரியம் விற்பனைக்கல்லவென்று.. 😊


#வரதட்சணை




Wednesday, 18 August 2021

சின்னஞ்சிறு விசித்திர உலகம்

 அவதார் உலகத்தையும் விட

விசித்திர அழகானது

மழலைகளின் உலகம்..


நடு ராத்திரியில்

கால் மிகவும் சுடுகிறது 


காய்ந்து போன காயத் தடம்

பார்க்கும் பொழுதெல்லாம் வலிக்கின்றது 


தினமும் ஒரு

நிலா தோசை வருகின்றது


அதிகாலைச் சூரியன் 

ஆரஞ்சு பழமாகிறது 


சாலையில் செல்பவர்களில் பலர் 

பூச்சாண்டி ஆகிவிடுகிறார்கள்


நோட்டை விட சில்லறைக்கு

மதிப்பு அதிகம் 


நேத்திக்கு வரேன் என காலங்களை 

குழப்பிவிடுவது..


இப்படி இப்படியாக ...

இன்னும் இன்னுமாக...


தெரிந்தால் சொல்லுங்களேன்..


யாரிடம் மனு கொடுக்க வேண்டும்..


இந்த விசித்திர உலகத்தில் 

சின்னஞ்சிறு இடத்தில் 

வசிக்கும் குடியுரிமை

பெற்றுச் செல்ல 😍😍




Tuesday, 22 June 2021

மழை எனும் வாழ்வாதாரம்

 கருகருவென மேகங்கள் கூடி  

வெகுநேரம்

ஆட்டம் காட்டிக் கொண்டிருந்த

மழை 

ஒருவழியாய் சரசரவென

பெய்யத் தொடங்கியது..


கையில் அகப்பட்ட

வண்ண நெகிழி குடங்களைப்

பற்றிக் கொண்டே

இடி மின்னலை

பொருட்படுத்தாது

வீதி விரையும் 

அக்காவிற்கு 

ரசிக்கத் தெரியாது

மழையின் வேகத்தை!!


புழக்கடை தரையில் 

ஒட்டிப்போய் கிடந்த

புழுதியை

ஈக்குமாறினால்

பரபரவென தேய்த்து 

கழுவும் அம்மாவும்

ரசித்ததில்லை

பெரு மழையின் அழகை!!


நெற்றியில் உருளும்

துளிகளை 

துடைக்காமல்

இருசக்கர வாகனத்தை

வீதியில் நிறுத்தியபடி

இரும்புக் கம்பிகளை 

சொட்டசொட்ட நனைந்த

பழைய துண்டினால்

துடைக்கும் அப்பாவும்

ரசிப்பதில்லை

அம்மழையின் தன்மையை..


கட்டிவைத்திருந்த

மண் வீடு கரைந்து விடாமல்

பாவாடை கொண்டு 

மறைத்தபடி நிற்கும்

தங்கையும் ரசிப்பதில்லை

அடித்து பெய்யும் மழையின் பெருந்துளிகளை..


ரசிப்பவர்கள் ரசித்துக் கொண்டிருங்கள்..


ரசனைக்கும் மீறின இயல்பிலேயே

நாங்கள் கடத்திக் கொள்கிறோம்

இவ்வாழ்வை !! 


மழை..


எங்களுக்கு மாபெரும்

வாழ்வாதாரம்!!




Tuesday, 23 March 2021

மகள் என்னும் தேவதை

அவளிடமிருந்து 

ஒற்றை முத்தம் 

பெறுதல் 

அவ்வளவு எளிதல்ல..


எவ்வித கெஞ்சலுக்கும்

எத்தனைவித கொஞ்சலுக்கும்

மிட்டாய் லஞ்சத்திற்கும்

சற்றும் மசிய மாட்டாள்


ஆனால்..


சட்டென்று

பெருந்தூரலாய்

நிலத்தில் விழும்

மழையைப் போலவே


எதிர்பாரா தருணத்தில்

தானாகவே

கட்டிக் கொள்வாள்

கழுத்தை


ஈரம் பிசுக்கும் 

வாயால்

முகமெங்கும்

முத்தாடுவாள்


ஆம்..


அவள் என்

பெரும் மழை..


பேரின்ப மழையும்

அவளே !! 💕💕



Monday, 15 March 2021

மருதாணி திருவிழா

 ஐப்பசி மாசத்துல

அப்பி பிடிக்கும் என்ற

அப்பத்தாவின் வார்த்தைகள்

மனதில் எதிரொலியாய்


வாய்ல வச்சா

விசமாம்டி என்று

தோழிகளோடு

அளவாடியபடியே

அம்மியில் அரைபட்டது 

இலைகளோடு

கொட்டைபாக்கும் புளியும்


அவசரகதியில் முடிக்கப்பட்ட

இரவு உணவில் பசி மறைய


முற்றத்தில் அமர்ந்தபடியே

வரிசையாக

நீட்டப்பட்ட கரங்களில்

அம்மா வார்த்தாள்

குட்டி மருதாணி தோசை 


எப்பொழுது விடியும்

என எதிர்பார்ப்போடு

எப்பொழுது தூங்கினோம் 

என அறியாத

இரவின் முடிவில்


தலையணையில்

கொஞ்சம்

தலையில்

கொஞ்சம்

தள்ளியிருந்த தங்கையின்மேல்

கொஞ்சம் போக

மீதியிருந்த காய்ந்த மருதாணி

சிவப்பேறிய கரங்களில்

பார்த்ததுமே 

அப்படியொரு பரவசமும்


அவளைவிட எனக்கு தான்

செவந்திருக்கு

என மனதில் பெருமிதமாய்...


இப்படியாக

அரங்கேறியது

ஒரு மருதாணி திருவிழா 💕




Friday, 5 March 2021

அது ஒரு அழகிய பயணக் காலம் !!

பரபரவென அடித்து

கூந்தலைக் கலைத்து

முகத்தில் பரப்பிவிட்டுச்

செல்லும் காற்று


விரல்களும் பாதங்களும்

தனையறியாமலே

தாளம்போட வைக்கும்

ஸ்பீக்கரில் கசியும் பாடல்கள்


முன்பின் அறியாத மழலை

தாயின் தோளிலிருந்து

எட்டிப்பார்த்துச்

சிரிக்கும் சிநேகப் புன்னகை


அருகிலிருக்கும் ஊர்க்காரரோடு

சப்தமாய் பேசும்

கொண்டைமுடிந்த ஆச்சி 


கூடையிலிருக்கும் வெள்ளரிக்காவை

விற்றுவிட வேண்டுமென

கூவிக் கொண்டே ஏறியிறங்கும்

பேருந்து நிறுத்த வியாபாரி 


என பலவித காட்சிகள்

கொஞ்சம் கொஞ்சமாக

மனதை இலகுவாக்கியபடியே..


எத்தனையோவித குரல்கள்

எத்தனையோவித சப்தங்கள்..

எத்தனையோவித  முகபாவங்களோடு மனிதர்கள்

எத்தனையோவித நிறுத்தங்கள்..


எல்லாவற்றையும்

நினைவடுக்கின் அடிப்பேழையிலிருந்து

மென்மையாக

புரட்டிக் கொண்டிருக்கிறேன்..


பூட்டப்பட்ட ஏசி காருக்குள்

இருவர் மட்டும்

மௌனமாய் பயணித்த

ஒரு பயணப்பொழுதில்.. 💕